செய்தியாளர்: விக்னேஷ்முத்து
தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில், முதன்முறையாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேர்கண்டது புதிய தலைமுறை. அப்போது நம்மோடு அவர் பேசுகையில்,
“நமது நாட்டை முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு நமது இளைஞர்களுக்கு முழு அளவில் நாம் பயிற்சி கொடுத்து தயார் செய்ய வேண்டும். அப்படி தயார்செய்ய தற்பொழுது உள்ள பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவற்றை நாம் வலுப்படுத்த வேண்டும். அதற்காக யுஜிசி பல மாறுதல்களை கொண்டு வருகிறது. அதற்காகத்தான் பல திட்டங்களையும் யுஜிசி அறிமுகப்படுத்துகிறது. நேஷனல் கிரெடிட் பிரேம் ஒர்க் போன்ற விஷயங்களை உதாரணமாக சொல்லலாம்.
இதன்வாயிலாக திறன் பயிற்சி வழங்குவது, உயர்கல்வி துறையில் இந்திய மொழிகளின் பாடங்களை பெறுவது, நான்காண்டுகளுக்கான கல்விமுறை வழங்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தனித்துவமான அதே சமயம் ஒருங்கிணைந்த கல்வி முறையை உயர்கல்வியில் மாணவர்கள் பெற வேண்டும் என்பதுதான் இதற்கான இலக்கு.
நீங்கள் எந்தப் பெயரில் அதை அழைத்தாலும் அது தனித்துவமான ஒருங்கிணைந்த கல்வி முறையை மாணவர்களுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும். அது நமது உயர்கல்வி துறையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அது சரிதான்; நமது உயர்கல்வி மாணவர்களை, பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்டவர்களாக மாற வேண்டும். அதுதான் உச்சபட்ச இலக்காக இருக்க வேண்டும். அதை நீங்கள் எந்த பெயரை வைத்து வேண்டுமானாலும் அழைக்கலாம்.
தமிழ்நாடு உயர்கல்வி துறையில் வழங்கும் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்நாட்டில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் போன்ற பழமையான நிறைய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் புதிய கல்வி சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நாட்டிற்கு கல்வித் துறையில் இது வழங்கும் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். உதாரணமாக உயர்கல்வி துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டை மேலும் மேம்படுத்துவதை சொல்லலாம். மேலும் நமது உயர்கல்வி அமைப்புகளில் அதிக அளவில் ஆய்வு துறைகளை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது” என்றார்.