வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் நிரவ் மோடிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் தொழிலதிபர் நிரவ் மோடி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விவகாரத்தில் நிரவ் மோடி தவிர அவரது மனைவி அமி மோடி, மாமா மெஹுல் சோக்சி, சகோதரர் நிஷால் மோடி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நடவடிக்கைக்கு அஞ்சி வெளிநாட்டிற்கு தப்பி விட்ட நிரவ் மோடியை மீட்டு வரும் நடவடிக்கையாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் கடந்த மாதம் 29ம் தேதி பிறப்பித்துள்ளது. இதையடுத்து 192 நாடுகளில் நிரவ் மோடி எங்கிருந்தாலும் அவரை அந்நாட்டு அரசுகள் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிரவ் மோடிக்கு இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.