நாடு முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் இயங்காது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 6 லட்சத்தினை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் தீவிரமாக அமலில் இருப்பதால் ஏற்கெனவே ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டு விமானச் சேவைகள் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கும், சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று யூகிக்கக்கூடிய வகையிலிருந்தால், ஜூலை மாதத்தில் மீண்டும் பயணிகள் விமானச் சேவையைத் தொடங்குவது குறித்து இந்தியா முடிவெடுக்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.