பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பேசியது என்ன? சுவாரஸ்யமான தகவல்கள் - உங்களுக்காக இதோ.
இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றார். அதை முடித்துக் கொண்டு இரவு 8.40 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த பிரதமர் இரவு அங்கேயே தங்குவதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் வருவதற்கு முன்பாகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழு என்ற உச்சபட்ச அதிகாரம் மற்றும் முடிவுகளை எடுக்கக் கூடிய குழுவுடன் பிரதமர் சந்திப்பதற்கான திட்டமிடப்பட்டது. அதன்படி பிரதமர் வருவதற்கு முன்பாகவே அதில் பங்கேற்க கூடியவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். பிரதமர் இரவு உணவுக்கு பின்னராக சரியாக 9.40 மணிக்கு தமிழக பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகளை சந்திக்க தொடங்கினார்.
இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்., சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், கருப்பு எம்.முருகானந்தம், A.P.முருகானந்தம், கேசவ விநாயகம், கார்த்தியாயினி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பேச தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி, அதிலும் முக்கியமாக நிர்வாகிகளான நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் உங்களிடமிருந்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று பிரதமர் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி எந்த விதத்தில் இருக்கிறது என்பது குறித்தும் பேசியிருக்கிறார். அதிலும் குறிப்பாக 8 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மத்திய ஆட்சியில் செய்தவரும் திட்டங்கள் மக்களிடத்தில் எவ்வாறாக இருக்கிறது என்பதையும் பிரதமர் கேட்டறிந்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில் மேலும் சுவாரஸ்யமாக பாஜக துணைத் தலைவர்களில் ஒருவரிடம் பிரதமர் பேசும்பொழுது மனோன்மணியம் பற்றியும் பேசி இருக்கிறார். ஒவ்வொரு நிர்வாகியும் தனித்தனியாக சந்தித்து அவர்களது பின்னணி அவர்களது தொழில் குடும்பத்தினர் பற்றியும் பிரதமர் கேட்டறிந்திருக்கிறார்.
மேலும் மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசிய பிரதமர், தமிழகத்தில் தற்போது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். மற்றொரு கட்சியின் உள் விவகாரம் என்றாலும் கூட கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் நிர்வாகிகளிடம் பிரதமர் கருத்து கேட்கக் கூடும் என்ற செய்தி நிலவியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
எனவே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி குறித்தும். நிர்வாகிகளை பற்றியும், நிர்வாகிகள் அறிமுகமும் செயல்பாடும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனை இரவு 9:40 மணிக்கு தொடங்கி இரவு 11.50 மணிக்கு நிறைவடைந்தது.மிக நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கட்சியை அடுத்த கட்டத்திற்கு பாரதிய ஜனதா தமிழகத்தில் எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.
- சுபாஷ் பிரபு