காதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்

காதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்
காதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்
Published on

தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக்கொலையை அரங்கேற்ற முயற்சி நடந்துள்ளது. சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தையே, இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தெலங்கானாவின் நல்கொண்டா மாநிலத்தில் கருவுற்ற மனைவியின் கண் எதிரிலேயே கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. அம்ருதா என்ற அந்தப் பெண்ணின் தந்தையே தனது மருமகனை ஆள் வைத்து கொலை செய்த இந்தச் சம்பவம் தெலங்கானாவை உலுக்கியுள்ளது. பிரனய்யின் கொலைக்கு நீதி கோரி முழக்கங்கள் எழுந்துள்ள சூழலில், ஹைதராபாத்தில் மேலும் ஒரு ஆணவக்கொலைக்கான முயற்சி நடந்துள்ளது.

ஹைதராபாத்தின் சானாத் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த மாதவி, சந்தீப் இருவரும், கடந்த 12 ஆம் தேதி காவல்துறை முன்னிலையில், இருவீட்டாரின் மத்தியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரெ‌ன தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மாதவியின் தந்தை, இருவருக்கும் புத்தாடை எடுத்துத்தர அழைப்பு விடுத்துள்ளார். 

இதனை நம்பி மாதவியும், சந்தீப்பும் வந்து காத்திருந்‌தனர். இருசக்கர வாகனத்தில் காதல் தம்பதி காத்திருக்க, மற்றொரு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தார் மாதவியின் தந்தை, வண்டியை நிறுத்திய பின், சட்டென்று தான் பையில் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்தார். அந்த அரிவாளால் சந்தீப்பை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த தனது மகள் மாதவியையும் வெட்டித் தள்ளினார். மாதவி, சந்தீப் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். 

இதில் மாதவிக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சந்தீப்பிற்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com