இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு வழங்கப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை உடைக்கும் பணியை நிறுத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், கப்பல் உடைக்கும் பணியில் 40 சதவீதம் முடிவடைந்து விட்டதால், உடைந்த பாகங்களை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் எச்.எம்.எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்த ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் கடந்த 1987-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து ஆகிய 2 நாடுகளுக்கும் தனது 57 ஆண்டு கால சேவையை வழங்கிய ஐஎன்எஸ் விராட் கப்பல் 226. 5 நீளமும் 48.78 மீட்டர் அகலமும் கொண்டது.
ஐ.என்.எஸ் விராட் கப்பலில் 26 போர் விமானங்களை நிறுத்திவைக்க முடியும்.‘கிராண்ட் ஓல்டு லேடி’ என அழைக்கப்படும் ஐஎன்எஸ் போர்க்கப்பலின் எடை 28,700 டன். 2,256 நாள்களை கடலில் கழித்து, 5,88,288 மைல்கள் கடலில் பயணித்த இந்தக் கப்பலுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வு வழங்கப்பட்டது.
இந்தக் கப்பலை 2018-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அருங்காட்சியமாக மாற்ற முன் வந்தது. அதேபோல, ஆந்திரப் பிரதேச அரசும் 300 கோடி கொடுத்து அதனை பாரம்பரிய கப்பலாக பராமரிக்க முன்வந்தது. அந்த முயற்சிகள் கை கூடாமல் போக, ஓய்வு பெற்ற கப்பலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராம் குழுமம் ரூ.38.54 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதனைத்தொடர்ந்து குஜராத்தின் அலங்க் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்திற்கு ஐஎன்எஸ் விராட் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே போர்க் கப்பலை அருங்காட்சியமாக மாற்ற விருப்பம் தெரிவித்த என்விடெக் மரைன் நிறுவனம், கப்பலை 100 கோடிக்கு வாங்க முன்வந்தது. அதன்படி தடையில்லா சான்றிதழைப் பெற மத்திய அரசிடம் என்விடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்தது.
இதனையடுத்து பேசிய ஸ்ரீ ராம் குழுமத்தின் தலைவர் முகேஷ் படேல், “என்விடெக் நிறுவனம், அரசின் தடையில்லா சான்றிதழை பெறுவதோடு, ரூ.100 கோடியை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்தார். இதனால் கப்பலை அருங்காட்சியமாக மாற்றும் பணியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கப்பல் உடைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், என்விடெக் மரைன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில், ஐஎன்எஸ் விராட் கப்பல் உடைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 40 சதவீத உடைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில், அதன் பாகங்களை மீண்டும் பொருத்துவதற்கு வாய்ப்பில்லை என உடைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம் குழுமத்தின் தலைவர் முகேஷ் படேல் கூறியுள்ளார்.
- கல்யாணி பாண்டியன்