இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு வழங்கப்பட்ட, ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1959ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கப்பற்படையில் எச்.எம்.எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்த ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் கடந்த 1987-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகள் இந்தியக் கடற்ப்டைக்கு சேவை புரிந்த இந்தக் கப்பலுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற கப்பலை ராம் குழுமம் ரூ.38.54 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதனைத்தொடர்ந்து குஜராத்தின் அலங்க் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்திற்கு ஐஎன்எஸ் விராட் கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே போர்க் கப்பலை அருங்காட்சியமாக மாற்ற விருப்பம் தெரிவித்த என்விடெக் மரைன் நிறுவனம், கப்பலை 100 கோடிக்கு வாங்க முன்வந்தது. அதன்படி தடையில்லா சான்றிதழை பெற மத்திய அரசிடம் என்விடெக் நிறுவனம் விண்ணப்பித்தது.ஆனால் அந்த கோரிக்கையை அரசு நிராகரித்தது.
இதனையடுத்து பேசிய ஸ்ரீ ராம் குழுமத்தின் தலைவர் முகேஷ் படேல் “என்விடெக் நிறுவனம், அரசின் தடையில்லா சான்றிதழை பெறுவதோடு, 100 கோடியை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்தார். இதனால் கப்பலை அருங்காட்சியமாக மாற்றும் பணியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கப்பல் உடைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் என்விடெக் மரைன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில், ஐஎன்எஸ் விராட் கப்பல் உடைக்கும் பணியை நிறுத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கப்பலின் பெரும்பாலான பகுதி உடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.