இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் கடலோர பாதுகாப்பு படை வலுப்பெற்றுள்ளது.
இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிரஞ்ச் தொழில்நுட்பத்தில் உருவான கந்தேரி, மராட்டிய மன்னர் சிவாஜியின் தீவு நகரான கந்தேரியின் நினைவாக அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல், 1500 டன்னுக்கும் அதிக எடை கொண்டது. 221 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல் 40 அடி உயரம் கொண்டதாகும். நீரின் மேற்பரப்பில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும் நீருக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் ஆற்றக் கொண்டது. தொடர்ந்து 50 நாட்கள் வரை நீருக்குள்ளேயே மூழ்கியிருக்கும் திறன் கொண்ட இந்தக் கப்பல், எட்டு கடற்படை அதிகாரிகளும் 35 மாலுமிகளும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டிமுடிக்கப்பட்ட கந்தேரி, தற்போது கடல் வழியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது