லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது கார் ஏறி 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரதாப் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் கூட்டத்திற்குள், அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் புகுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழு விசாரணை நடத்தி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இது நிரூபணமாகியிருப்பதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.