ஹரியானைவைச் சேர்ந்த இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நஃபே சிங் ரதீ கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் பஹதுர்கர் எனும் இடத்தில் நஃபே சிங் ரதீ கார் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் நஃபே சிங் ரதீ மற்றும் அவரது உதவியாளர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தனியார் பாதுகாப்பு பணியாளர்களும் காயமடைந்துள்ளதாக பிடிஐ செய்தி தெரிவித்திருந்தது.
சம்பவம் தொடர்பாக ரதீயின் மகள் ஊடகங்களுக்கு பேசுகையில், “துப்பாக்கிச் சூட்டில் அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் கொலையாளிகளுக்கு போதிய நிதி கிடைத்துள்ளது என தெரிகிறது” என்றுள்ளார். ரதீக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், காவல்துறையினரது பாதுகாப்பை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய தேசிய லோக் தள கட்சியின் மற்றொரு தலைவரான அபய் சௌதலா, “ரதீயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது” என குற்றம் சாட்டியுள்ளார்.
ரதீயின் குடும்பத்தினரோ, அவரது கொலைக்கு மறைந்த பாஜக தலைவர் ஒருவரின் குடும்பத்தினரை குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பஹதூர்கர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் ரதீ என்ற பாஜக தலைவர் தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் பாஜக அமைச்சர் மங்கே ராம் ரதியின் மகன், ஜெகதீஷ் ரதீ. இவர் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பல பெயர்களை தன் மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் நஃபே சிங் ரதீயின் பெயரும் இருந்தது. அந்த ஆடியோவின்படி “ஏற்கெனவே கடையை அபகரித்துக் கொண்ட நஃபே சிங் ரதீ, இப்போது என் நிலம் மற்றும் வீட்டையும் அபகரித்துக் கொள்ளபோவதாக மிரட்டுகிறார்” என தெரிவித்திருந்தார் ஜெகதீஷ் ரதீ.
இதனை அடுத்து நஃபே சிங் ரதீ உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நஃபே சிங் ரதீக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. அதில் வெளியே இருந்த நஃபே சிங் ரதீ, தற்போது படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இதை குறிப்பிட்டே, பாஜக தலைவரின் குடும்பத்தினருக்கு இக்கொலையில் தொடர்பு உள்ளதென சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நஃபே சிங் ரதீ கொலை குறித்து ஹரியானா மாநில முதலமைச்சர் கூறுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற சம்பவமொன்று நடந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக இதற்கு எதிர்வினைகளை தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, “நஃபே சிங் ரதீ ஹரியானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது. இன்று மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக உணரவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும் என ஜஜ்ஜார் மாவட்டத்தின் இணை ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.