கேரளா மாநிலம் ஆலப்புழா பள்ளிப்புரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ஆஷா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வாரம் அருகில் இருக்கும் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறகு குழந்தையுடன் ஆஷா அன்றே வீடு திரும்பியிருக்கிறார்.
இரு தினங்கள் கழித்து குழந்தையின் நலத்தை பரிசோதனை செய்வதற்காக இரண்டு செவிலியர்கள் ஆஷாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு பிறந்த குழந்தையை காணவில்லை. குழந்தை எங்கே என்று செவிலியர்கள் ஆஷாவிடம் கேட்டதற்கு, ஏற்கெனவே குழந்தை இருப்பதால் பிறந்த குழந்தையை விற்றுவிட்டதாக ஆஷா கூறியுள்ளார். இதனால் செவிலியர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
குழந்தை விற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆஷாவை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அவர் நடத்தியிருப்பது தெரியவந்தது.
ஆஷாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், ரதீஷ் என்ற நபருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவு ஆஷாவின் கணவருக்கும் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ரதீஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரதீஷ் உடனானஉறவில் ஆஷாவும் கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் கடந்தவாரம் ஆஷா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு உதவியாக ரதீஷ்தான் அங்கு இருந்துள்ளார். குழந்தை பிறந்ததும் குழந்தையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகமுடியாத சூழலில் ஆஷா இருக்கவே... மருத்துவமனையிலிருந்து குழந்தையுடன் வெளியேறிய ஆஷாவும், ரதீஷும் அன்று முழுவதும் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோவில் வைத்துக்கொண்டு ஊரை சுற்றி வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் அக்குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்து குழந்தையை போர்த்துவதற்கு ஒரு துணியையும் வாங்கி இருக்கின்றனர்.
பிறகு ரதீஷிடம் குழந்தையை ஒப்படைத்த ஆஷா தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்ற ரதீஷ் குழந்தையின் மூச்சைத் திணறச்செய்து கொலை செய்து யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்தும் விட்டார். போலீசாரின் விசாரணையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ரதீஷ் மற்றும் ஆஷாவின் மீது இந்திய தண்அனைச் சட்டம் பிரிவு 103 (1)ன் கீழ் கொலைக் குற்றம் மற்றும் கைக்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.