சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி இருந்துள்ளது, தொல்லியல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் 4,500 ஆண்டுகள் முதல் 8,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. நாகரிகத்தின் தோற்றம் குறித்து வரலாற்று அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்தின் புதைந்த நகரங்கள், மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகள் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், இன்றைய பாகிஸ்தானிலும் இருக்கின்றன.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அக்ஷிதா சூரியநாராயணன் தலைமையிலான குழுவினர் அண்மையில் சிந்து சமவெளி கால ஹரப்பர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் இன்றைய ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேசம் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 172 மண்பாண்ட பொருட்களை ஆய்வு செய்தனர்.
பன்றி, மாடு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் கிடைத்த எலும்புகளில் 50% முதல் 60% எலும்புகள் மாடுகளுடையதாக இருப்பதால், அக்கால மனிதர்கள் அதிகளவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இந்த ஆய்வின் முடிவுகள், 'Journal of Archaeological Science' இதழில் வெளியாகியுள்ளது. மேலும், இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பாண்டங்களில் பால் பொருட்களின் எச்சங்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.