ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத 40 ஏழை சிறுவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் போலீசார் ஒருவர்
கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் வகுப்புகளை படித்து வருகின்றனர். ஆனால் ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாமலும் பல சிறுவர்கள் உள்ளனர். அப்படியான 40 சிறுவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் காவலர் ஒருவர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சன்வர்., கான்ஸ்டபிளாக உள்ளார். இவர் இந்தூர் பகுதியின் லால்பஹா பாலஸ் பகுதியில் உள்ள 40 சிறுவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார்.
இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு 4 சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர். அது மெல்ல மெல்ல அதிகரித்து கொரோனா காலத்தில் மேலும் அதிகரித்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆசிரியராக மாறிவிடுவார் இந்த காவலர். மேலும் சக போலீசார்களின் உதவியைப் பெற்று இலவச பை, நோட்டுகள், பேனா, பென்சில் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற திட்டத்தின் கீழ் இந்த சேவையை சஞ்சய் தொடங்கி செய்து வருகிறார்.
இது குறித்து தெரிவித்த அவர், இந்த வகுப்புகள் 2016ம் ஆண்டு தொடங்கினேன். நான் வளர்ந்த போது எனது குடும்பத்தின் நிலை எனக்கு தெரியும். அதேபோல் வறுமையில் வாடும் குழந்தைகள் இவர்கள். நான் கண்ட பொருளாதார கஷ்டத்தை இவர்கள் முகத்தில் பார்க்கக்கூடாது என விரும்பினேன். பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும் நான் பாடம் எடுக்கிறேன். பல குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்குச் சென்றனர். அவர்களை கண்டுபிடித்து பாடம் நடத்தி படிப்பைக் கொடுத்தோம்.தற்போது அனைவருமே படிக்கின்றனர். பெற்றோர்களும் மனமுவந்து பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். என்றார்.
பாடம் படிப்பது குறித்து பேசிய ஆறாம் வகுப்பு மாணவர் பாயல், நான் மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்கிறேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் படிக்க வந்துவிடுவேன். எனக்கு இலவசமாக படிப்பு கிடைக்கிறது. நான் எதிர்காலத்தில் போலீசாராக வர ஆசைப்படுகிறேன் என கண்களில் நம்பிக்கை ஒளிர சொல்கிறார்.
போலீசாரின் இந்த சேவை குறித்து பேசிய உயர் அதிகாரி விஜய் காத்ரி, காவலர்கள் சிறப்பான பணியை செய்துவருகிறார்கள். அவர்கள் ஏழை சிறுவர்களுக்கு உதவி செய்கின்றனர். உதவி செய்து வரும் போலீசாருக்கு ஊக்கமாக தலா. ரூ.500 வழங்குகிறோம் என தெரிவித்தார்