செய்தியாளர்: தினேஷ் குகன்
தேர்தலுக்கு முன்னதாகவே சூரத்தில் பாஜகவை வெற்றி பெற வைத்த காங்கிரஸ் வேட்பாளரைப் போலவே, இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் பாஜகவுக்கு சாதகமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க களமிறங்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்கு முன்னதாகவே, பாஜக தன் வெற்றிக் கணக்கை குஜராத்தின் சூரத்தில் இருந்து தொடங்கிவிட்டது.
சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், பிற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகியதால், பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்த காங்கிரஸ் தலைமைக்கு, தற்போது மீண்டும் ஒரு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
அதன்படி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அக்ஷய் காந்தி பாம் (AKSHAY KANTI BAM), திடீர் திருப்பமாக, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதோடு, மத்தியப்பிரதேச அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அக்ஷய் காந்தி பாம் தன்னை பாஜக-வில் இணைத்துக்கொண்டார்.
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சங்கர் லால் வானிக்கு எதிராக பகுஜன் சமாஜ் வேட்பாளர் சஞ்சய் சோலங்கி மட்டுமே களத்தில் உள்ளதால், பாஜகவின் வெற்றி எளிதாகி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலையில் இடியாக விழுந்துள்ள அக்ஷய் காந்தியின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால், 17 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மீது பதியப்பட்ட வழக்கே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்த அக்ஷய் காந்தி, தன் மீதான குற்ற வழக்கு ஒன்றை குறிப்பிடவில்லை என, பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அக்ஷய் காந்தி பாம் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளதாகவும், இதை வெளிப்படையாக தெரிவிக்காததால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
எனினும், பாஜகவின் கோரிக்கையை நிராகரித்து, அக்ஷய் காந்தியின் வேட்புமனுவை, மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே, 2007 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில், கொலை முயற்சி செய்ததற்கான 307ஐபிசி பிரிவையும் சேர்க்க வலியுறுத்தி, அதில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர் மீது கொலை முயற்சிக்கான பிரிவை சேர்க்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, விசாரணைக்கு வரும் மே 10 ஆம் தேதி நேரில் ஆஜராக அக்ஷய் காந்தி மற்றும் அவரது தந்தைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்தூர் தொகுதிக்கு வரும் மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராக அக்ஷய் காந்திக்கு உத்தரவிட்டிருந்தது. இது அக்ஷய் காந்திக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, அக்ஷய்ம் காந்தி தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றதோடு, பாஜகவில் இணைந்துள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் வசம் இந்தூர் தொகுதி இருந்து வரும் நிலையில், தற்போது பிரதான வேட்பாளரே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.