மத்திய பிரதேசத்தில் புளூடூத் உதவியுடன் மருத்துவத் தேர்வு எழுதிய மாணவரை பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். எனினும், அந்த புளூடூத்தை அவர் எங்கே வைத்திருந்தார் என்பதுதான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த திங்கள்கிழமை(21.02.2022) இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக, திடீரென பறக்கும் படையினர் அங்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது, பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரி, மாணவர் ஒருவரின் அருகில் சென்றிருக்கிறார். அப்போது அந்த மாணவர் உடனடியாக தேர்வு எழுதுவதை நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேமடைந்த அந்த அதிகாரி, மாணவரை சோதனை செய்துள்ளார்.
இதில் அவரது பேண்ட் பையில் சிறிய அளவிலான செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை சோதனை செய்ததில், அதில் புளூடூத் இணைப்பு 'ஆன்' ஆகி இருந்தது. ஆனால், அந்த மாணவரிடம் எவ்வளவு தேடியும் புளூடூத் இல்லை. எனினும், அந்த மாணவரை பறக்கும் படையினர் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, புளூடூத்தை காதுக்குள் அறுவை சிகிச்சை பொருத்தியிருப்பதாக அந்த மாணவர் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டதும் பறக்கும் படையினர் ஒரு நிமிடம் திகைத்து போயினர்.
பின்னர், கல்லூரியில் இருந்த மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை மூலமாக அந்த புளூடூத்தை வெளியே எடுத்தனர். 11 ஆண்டுகளாக இறுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் காரியத்தை செய்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதற்காக, அருகில் உள்ள காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியுடன் புளூடூத்தை அறுவை சிகிச்சை மூலம் காதுக்குள் பொருத்தியதாகவும் அந்த மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவரை தேர்வில் தகுதிநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம், அவரை காவல்துறையில் ஒப்படைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்வில் விதவிதமாகவும், நூதன முறையிலும் மாணவர்கள் காபி, பிட் அடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பாஸ் ஆவதற்காக அறுவை சிகிச்சை செய்யும் வரை ஒரு மாணவர் சென்றிருப்பது புதுமையான முயற்சி என நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.