பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கான எல்லைப்பகுதிகளை மூடி பயணிகள் போக்குவரத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது. கொரோனா தாக்குதலால் கர்நாடகாவில் ஒரு முதியவரும் டெல்லியில் ஒரு மூதாட்டியும் இறந்த நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அண்டை நாடுகளுக்கான எல்லைப்பகுதிகளை மூடி பயணிகள் போக்குவரத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி பங்களாதேஷ், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளுடனான எல்லைகள் நள்ளிரவு முதல் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதி இன்று நள்ளிரவு மூடப்படுகிறது. வாகா எல்லை வழியாக தூதரக அதிகாரிகளும் ஐநா அதிகாரிகளும் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கொரோனா சோதனை நடைபெறும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளுடனான எல்லைப்பகுதிகள் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.