ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையை வாங்க விருப்பம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதை விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர்.என்.சவுபே உறுதி செய்தார். ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவையையும், அதன் குறைந்த விலை விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸையும் வாங்க தயாராக இருப்பதாக இண்டிகோ நிறுவனத் தலைவர் அதித்யா கோஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு பகுதியை வாங்குவது சாத்தியமில்லாவிட்டால், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக வாங்க தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வேறு பல நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டி இருப்பதாகவும், ஆனால் முறையாக கடிதம் எழுதியது இண்டிகோ மட்டும்தான் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.