இந்தியாவின் இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் இருந்து தெலங்கான தலைநகர் ஹைதராபாத்துக்கு 130 பயணிகளுடன் இன்று காலை இண்டிகோ 6E-1406 விமானம் வந்துக் கொண்டிருந்தது. இதில் பாகிஸ்தான் எல்லையை நெருங்கும் போது விமானம் தொடர்ந்து பறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி உணர்ந்தார். உடனடியாக இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்க அந்நாட்டு அரசாங்கத்திடம் இண்டிகோ அதிகாரிகள் அனுமதி கோரினர். இந்திய அராசங்கமும் பாகிஸ்தானிடம் இதுதொடர்பாக பேசியது. சிறிது நேரத்துக்கு பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து, கராச்சி நகரில் உள்ள விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது.
இதன் தொடர்ச்சியாக, விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலையத்தில் இருந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு விமானம் கராச்சிக்கு சென்று அந்தப் பயணிகளை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2 இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சி நகரில் தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் கூறுகையில், "பாகிஸ்தானில் விமானம் தரையிறங்குவது எளிதான விஷயம் அல்ல. இதற்கு அனுமதி கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் மிக நீண்டநேரம் எடுத்துக் கொண்டது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்திய விமானம் என்பதால்தான் பாகிஸ்தான் இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்திய அரசாங்கம், பாகிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதர், விமான ஒழுங்குமுறை ஆணையம் என அனைவரும் இதுதொடர்பாக பாகிஸ்தானிடம் பேசினார். அதன் பிறகே அங்கு விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்தது" என்றார்.