இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை 2022 டிசம்பரில் 8.30 சதவீதமாக அதிகரித்து இருந்தது. பின்னர் ஜனவரியில் 7.14 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் மீண்டும் 7.45 சதவீதமாக உயர்ந்தது. தற்போது அதைவிட 0.35 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.5 சதவீதமாகவும் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.
மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வேலையில்லாத் திண்டாட்டம் ஹரியானாவில் 26.8 சதவீதமும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 26.4 சதவீதமும், ஜம்மு காஷ்மீர் 23.1 சதவீதமும், சிக்கிம் 20.7 சதவீதமும், பீகார் 17.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்ட் 17.5 சதவீதமும், உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கரில் 0.8 சதவீதமும், புதுச்சேரியில் 1.5 சதவீதமும், குஜராத்தில் 1.8 சதவீதமும், கர்நாடகாவில் 2.3 சதவீதமும், மேகாலயா மற்றும் ஒடிசாவில் தலா 2.6 சதவீதமும் உள்ளது. தமிழ்நாட்டிலும் வேலையின்மை பிப்ரவரி மாதத்தை விட அதிகரித்திருக்கிறது. அதன்படி பிப்ரவரியில் இது 3 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாட்டில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் சமீபகாலமாக நிலவும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நிறுத்திவைத்தும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.