21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி இஸ்ரேலின் எய்லட் நகரில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அழகு, அறிவு, உடல்வாகு, சமூகப் பார்வை என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன.
பராகுவே, தென்னாப்பரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிகள், இந்தியாவை சேர்ந்த இளம்நாயகியான ஹர்னாஸ் சாந்துக்கு சவாலாக இருந்தனர். முடிவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் நாயகியான ஹர்னாஸ் சாந்து, இந்த பிரபஞ்சத்தின் புதிய அழகியாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் சாந்துவுக்கு கிரீடத்தை சூட்டினார்.
இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். முக்கிய சுற்றில், இன்றைய அழுத்தமான சூழலை எதிர்கொள்வதில் இளம் பெண்கள் எத்தகைய அணுகுமுறையை கையாள வேண்டும் என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்னாஸ் சாந்து, இளைஞர்கள் தங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். தனித்துவம் தான் இந்த வாழ்க்கையை அழகுபடுத்தும் எனக் கூறினார்.
பிறருடன் நம்மை ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகளவில் நடைபெறும் விஷயங்களை பேச வேண்டும் எனக் கூறினார். உங்களை பற்றிப் பேச நீங்கள் தான் முன்வர வேண்டும் என்றார். நீங்கள் தான் உங்களுக்கு தலைவர் என்பதை மறந்து விடக் கூடாது என்றார். நம் பேச்சு தான் நமது எண்ண வடிவம் என்றும், அந்த உயர்ந்த எண்ணத்தின் காரணமாகவே, தாம் இந்த மேடையில் நிற்பதாகவும் ஹர்னாஸ் சாந்து பேசினார். ஹர்னாஸின் இந்தப் பேச்சு நடுவர்களை வெகுவாக கவர்ந்தது.