நடப்பாண்டின் முதல் காலாண்டில் மட்டும் டிஜிட்டல் கைது மோசடிகளால், இந்தியர்கள் ரூ.120.3 கோடி இழந்திருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் (MHA) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்.27) நடைபெற்ற "மன் கி பாத்" நிகழ்ச்சியின் 115-வது எபிசோட்டில் எடுத்துரைத்தார். (பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்).
இதுதொடர்பான அந்த அறிக்கையில், ’’டிஜிட்டல் கைது மோசடிகள், வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் டேட்டிங் அப்ளிகேஷன் மோசடிகள் உள்ளிட்ட 46 சதவீத டிஜிட்டல் மோசடி வழக்குகள் மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவைத் தளமாகக் கொண்ட மோசடிக்காரர்களால் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ரூ.1,776 கோடியை இழந்துள்ளனர்.
மேலும், ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் 15.56 லட்சம் புகார்களும், 2022-ஆம் ஆண்டில் 9.66 லட்சம் புகார்களும், 2021-ஆம் ஆண்டில் 4.52 லட்சம் புகார்கள் வந்துள்ளன’’ என்று இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “டிஜிட்டல் கைது மூலம் இந்தியர்கள் ரூ.120.30 கோடியும், வர்த்தக ஊழலில் ரூ.1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ.222.58 கோடியும், காதல்/டேட்டிங் மோசடியில் ரூ.13.23 கோடியும் என மொத்தம் ரூ.1,776 கோடியை இழந்திருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
”இந்த நாடுகளில் உள்ள சைபர் கிரைம் செயல்பாடுகள், போலியான வேலைவாய்ப்புகள் மூலம் இந்தியர்களை கவரும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்பு முயற்சிகள் உட்பட, ஒரு விரிவான ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்துகின்றன” என ராஜேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ ’டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிகரித்து வருகிறது. காவல் துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுப்பார்கள். இவ்வாறு செய்து, தனி மனிதர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு, அவர்களை நம்பவைத்து மிரட்டி, கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அபகரித்து விடுகின்றனர். செல்போனில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நீங்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும். தாங்கள் குறிவைக்கப்படுவதாக பொதுமக்கள் உணர்ந்தால் நில், சிந்தி, செயல்படு என்ற வகையில் பிரச்னையை கையாள வேண்டும். மேலும் 1930 என்ற சைபர் உதவி எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம்மேலும், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் கும்பல்களை பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள்போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்புகொண்டு போலியாக மிரட்டல் விடுக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்கள், சட்ட விரோதமான பொருட்கள், போதைப் பொருட்கள், போலி கடவுச்சீட்டுகள் அல்லது பிறவற்றைக் கொண்ட பார்சல்களை அனுப்பியதாக அல்லது அனுப்புவதாகக் கூறி அழைப்பாளருடன் அழைப்பைப் பெறுவார்கள். வேறு சில சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து, பாதிக்கப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறுவார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரை வீடியோ அழைப்பின்மூலம் குறிவைத்து, சீருடை அணிந்து, சட்ட அமலாக்கப் பிரிவினர் எனக் கூறி, வழக்கை முடிக்க பணம் கோருவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து பணத்தை இழக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதே டிஜிட்டல் கைது மோசடிகள் ஆகும்.