இன்றைய இளைஞர்கள் சாகசங்களை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மலையேற்றம், பைக் ரேசிங், நீச்சல், போன்ற அசாத்திய நிகழ்வுகளை தங்களின் பொழுது போக்கிற்காகவும், தங்களின் திறமைகளை வெளிகாட்டவும் செய்து வருகின்றனர்.
அப்படி நேபாளத்தில் மலையேறும் பயிற்சி செய்த இந்திய இளைஞர் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார் பகுதியைச் சேர்ந்த அனுராக் மாலும் என்ற 34 வயது இளைஞர் தொழில் முனைவோராக உள்ளார். இவர் மலையேறும் பயிற்சிக்காக நேபாளத்தில் உள்ள அண்ணப்பூர்ணா மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாரா விதமாக அவர் பனி சூழ்ந்த அப்பகுதியில் பனி பிளவு பாறை ஒன்றுக்குள் தவறுதலாக விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 6000 மீட்டர் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அனுராக் மாலுமை தொடர்ந்து தேடும் பணியானது நடைபெற்று வருவதாக மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, ராணுவத்தினர் அவரை பத்திரமாக மீட்டது குறிப்பிடத் தக்கது.