2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிவரை வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் மல்யுத்த விதிமுறையின் படி கடைசிநேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த செய்தி, 'எப்படியும் தங்கம் கிடைத்துவிடும்' என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்திய ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கியது. இருப்பினும் மேல்முறையீடு செய்து அரையிறுதிவரை முன்னேறியதற்காக வெள்ளிப்பதக்கம் தரவேண்டும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக விளையாட்டு நடுவர் மன்றம் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பாரிஸிருந்து இன்று தாயகம் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து மக்கள் தங்களின் உற்சாக வரவேற்பினை வழங்கினர்.
இன்று காலை பாரிஸிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த வினேஷ் போகத்திற்கு ரசிகர்கள், விவசாய சங்கத்தினர், சக மல்யுத்த வீரர்கள் என அனைவரும் தங்களின் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.
ஒலிம்பிக் பதக்கம் வெல்லாவிட்டாலும், மக்களின் மனங்களை வென்ற வினேஷ் போகத்திற்கு, டெல்லியிலிருந்து ஹரியானா செல்லும் வழி நெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில், வினேஷுன் சொந்த கிராமமான பலாலி கிராமத்திலிருந்து ஏராளமானோர் டெல்லிக்கு வருகை தந்து மேள தாளத்துடன் வினேஷ் போகத்திற்கு வரவேற்பு வழங்கினர்.
தாயகம் திரும்பிய வினேஷுக்கு கண்ணீர் மல்க சக மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி ஆகியோர் கண்ணீர் மல்க தங்களின் வரவேற்பினை வழங்கி, அவரின் அருகிலேயே ஆறுதல் வழங்கி கொண்டிருக்கின்றனர். மேலும், வெற்றி நாயகியான வினேஷுக்கு பச்சைத் துண்டு அணிவித்து விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். “பதக்கம் வெல்லாவிட்டாலும் வினேஷ் எப்போதும் எங்கள் நாயகிதான்” என பலாரி மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, தற்போது தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வினேஷுக்கு, ஹரியானாவில் உள்ள 12 முக்கிய இடங்களில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ், "மக்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி” என்று உணர்ச்சிபொங்க நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், வெள்ளி வென்ற வீரர்களுக்கான மரியாதை வினேஷ்க்கு வழங்கப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்த நிலையில், மக்கள் தங்கப்பதக்கம் வென்றவருக்கு அளிக்கப்படும் மரியாதையை வினேஷ் போகத்திற்கு தற்போது வழங்கி வருகின்றனர்.