வரலாற்றிலேயே முதன்முறையாக 17 மணி நேரம் தொடர்ந்து விமானத்தை இயக்கி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால், அமெரிக்க அருங்காட்சியத்தில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ முதல் இந்தியாவின் பெங்களூரு வரை உள்ள வழித்தடம், உலகின் மிக நீளமான விமான வழித்தடம் ஆகும். பனிபடர்ந்த வடதுருவத்தை உள்ளடக்கிய இவ்வழித்தடத்தின் மொத்த பயண தூரம் 16 ஆயிரம் கிலோ மீட்டர் ஆகும். இந்த வழித்தடத்தை 17 மணி நேரம் கடந்து பெண் விமானிகள் குழு சாதனை படைத்தது.
இந்த குழுவின் கேப்டனான இந்திய பெண் விமானி ஜோயா அகர்வாலுக்கு, அமெரிக்கா விமான அருங்காட்சியகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் முதன்முதலில் 1980 இல் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டது. விமானத் துறையின் வரலாறு தொடர்பான 1,50,000 தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த அருங்காட்சியகத்தில் ஒரு மனிதன் இடம்பெறுவது இதுவே முதல் முறை.
அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருப்பது பெருமை அளிப்பதாகவும், தன்னால் இதனை நம்ப முடியவில்லை என்றும் பெண் விமானி ஜோயா அகர்வால் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் முதல் இந்தியப் பெண் நான்தான் என்று நம்ப முடியவில்லை. எட்டு வயது சிறுமியாக இருக்கும்போது தனது மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்து விமானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். தற்போது அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் நான் இடம்பெற்றிருப்பது பெரும் மரியாதை... இது எனக்கும் எனது நாட்டிற்கும் ஒரு சிறந்த தருணம், ”என்று ஜோயா அகர்வால் கூறினார்.
ஜோயா அகர்வால் மே 2004 முதல் ஏர் இந்தியாவில் பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில், ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானத்தை ஓட்டிய முதல் இளம் பெண் கமாண்டர் ஆனார். இந்தியாவில் பெண்கள் தங்களது கனவுகளை விட்டுக்கொடுக்க கூடாது என அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் ஜோயா அகர்வால். “சமூகம் எதிர்த்தாலும், உங்கள் கனவுகளை தயவு செய்து விட்டுவிடாதீர்கள். இது இந்தியாவில் பல பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாகும். உங்கள் சொந்த குடும்பமே உங்கள் கனவுகளை கைவிடச் சொல்லும். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதீர்கள். பைலட் ஆக மட்டும் அல்ல, எந்த ஒரு தொழிலையும் செய்ய நினைக்குன் இந்திய பெண்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாமல் தொடருங்கள் என்பதாகும்” என்று அவர் கூறினார்.