21 ஆண்டுகளுக்கு பிறகு கிரீடம் - Mrs World 2022 பட்டத்தை பெற்ற இந்திய பெண்
நேற்று லாஸ் வேகாஸில் நடந்த போட்டியில் Mrs World பட்டத்தை வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கௌஷால். 63 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு கிரீடம் கிடைத்துள்ளது.
Mrs World அழகிப்போட்டியானது திருமணமான பெண்களுக்கு நடத்தப்படுகிறது. Mrs America அழகிப்போட்டியை அடிப்படையாகக் கொண்டு 1984ஆம் ஆண்டு முதல் அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் Mrs Woman என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது 1988ஆம் ஆண்டு Mrs World என பெயர் மாற்றப்பட்டது. இதுவரை 80க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்த போட்டிகளில் திருமணமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். அதில் அமெரிக்காதான் அதிகமுறை பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஒரே ஒருமுறைதான், அதாவது 2001ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் தான் பட்டம் வென்றிருந்தார். அதன்பிறகு தற்போது இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கௌஷால் தற்போது பட்டம் வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் சர்கம் கௌஷால். ஆங்கில முதுகலை பட்டதாரியான சர்கம், விசாகப்பட்டினத்தில் முன்பு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவருடைய கணவர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து வருகிறார். பட்டம் வென்றது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். தனது மகிழ்ச்சியை பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்கம், “நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நம்மிடம் கிரீடம் வந்திருக்கிறது” என்று நெகிழ்ந்துள்ளார். முடிசூடப்பட்ட பிறகு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் கௌஷால்.
தொடர்ந்து, “21-22 ஆண்டுகளுக்கு பிறகு நாம் கிரீடத்தை திரும்ப பெற்றுள்ளோம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். லய் யூ இந்தியா, லவ் யூ வேர்ல்டு” என்று கூறியுள்ளார்.