இந்திய சாப்ட்வேர் என்ஜினீயர் தாய்லாந்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, பாஸ்போர்ட் இல்லாததால், அவரது உடலை கொண்டு வர குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரக்யா பலிவால் (29). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெங்களூரில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் தாய்லாந்தில் உள்ள புக்கட்டில் நடந்தது. இதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். அவருடன் இந்தியாவில் இருந்து வேறு சிலரும் சென்றிருந்தனர். அங்கு நடந்த கார் விபத்தில் பிரக்யா உயிரிழந்தார். அவரது உடல் புக்கட்டில் உள்ள படாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த தகவலை அவரது தோழி, அவர் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
பிரக்யாவின் குடும்பத்தில் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லை. இதனால் எப்படி தாய்லாந்து சென்று உடலை மீட்பது என்று தவித்தனர். இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ அலோக் சதுர்வேதி உதவியை நாடினர். அவர், முதலைமைச்சர் கமல்நாத்திடம் தெரிவித்தார். அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாகக் கூறிய அவர், மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார்.
’குடும்பத்தினருக்கு தேவை என்றால் உடனடி பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.