துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் அவரை விமானத்தில் பயணிக்கவிடாமல் இண்டிகோ நிறுவனம் தடுத்துள்ளது.
துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பயிற்சிக்காக கத்தார் செல்ல வேண்டும். பயிற்சிக்காக அவர் தன்னை விளையாட்டு ரக துப்பாக்கியை கொண்டு செல்லவிருந்தார். அதற்கான அனுமதி ஆவணத்தை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் ராஜீவ் பாட்யா வழங்கியிருந்தார். அந்த அனுமதி கடிதத்தில் தொண்டைமான் கத்தார் செல்லும் போது, அவருடன் ஆயுத எண் 156862 என்ற விளையாட்டு ரக துப்பாக்கியை உடன் கொண்டு செல்ல அனுமதிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்களுடன் இன்று நள்ளிரவு (12.30) விமானத்தை பிடிப்பதற்காக நேற்றிரவு விமான நிலையம் வந்துள்ளார். ஆனால் அவரை விமானத்திற்கு அனுமதிக்க முடியாது என இண்டிகோ விமான சேவை நிறுவனம் தடுத்துள்ளது. அவர் தான் உரிய ஆவணங்கள் வைத்துள்ளதாகவும், எனவே தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் துப்பாக்கியைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என இண்டிகோ நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். தான் இந்திய துப்பாக்கிச்சூடு வீரர் என்று, ஆசிய சேம்பியன் போட்டியில் பங்கேற்கப்போவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்தப் போட்டி ஒலிம்பிக்கில் தகுதி பெறும் போட்டி என்றும், எனவே முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டிக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவருக்கு அனுமதி வழங்காமல் இண்டிகோ நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்துள்ளது. தன்னை ஒரு குற்றவாளிபோல இண்டிகோ நிறுவனம் நடத்தியதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இறுதியில் இண்டிகோ நிறுவனத்தால் தனது விமானத்தையே பிருத்வி ராஜ் தவறவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அவர், இதற்கு உரிய நீதி வேண்டுமென மத்திய விளையாட்டுத்துறையின் அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.