ரயிலில் பயணித்த போது ஒன்றரை வயது குழந்தை தொலைத்த பொம்மையை இந்தியன் ரயில்வே நிர்வாகத்தினர் தேடிச் சென்று கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
கடந்த புதன் கிழமையன்று (ஜன.,04) செகந்திராபாத்தில் இருந்து அகர்தாலவுக்கு சென்ற சிறப்பு ரயிலின் B-2 பெட்டியில் பயணித்த பூஷின் பட்நாயக் என்பவர்தான் ரயில்வேயின் 139 என்ற ஹெல்ப்லைனை அழைத்து அதே பெட்டியில் பயணித்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தவறவிட்ட பொம்மை குறித்து தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, அந்த பயணித்தின் போது அதே பெட்டியில் 19 மாத ஆண் குழந்தையுடன் தம்பதி பயணித்தனர். அந்த குழந்தை தன்னிடம் வைத்திருந்த பொம்மையுடன் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடியது. ஆனால் ரயிலை விட்டு இறங்கும் போது அந்த பொம்மையை தவறவிட்டிருக்கிறது. இதனை
கண்ட பட்நாயக் ரயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால் பொம்மையை தவறவிட்ட அந்த குழந்தையின் குடும்பத்தினர் குறித்த எந்த விவரமும் தெரியாததால் செகந்திராபாத் முன்பதிவு கவுன்ட்ரில் விசாரித்து ரிசர்வேஷன் ஸ்லிப்பை வைத்து அவர்களின் தொடர்பு எண்ணை பெற்றிருக்கிறது இந்தியன் ரயில்வே நிர்வாகம்.
கிடைத்த தகவலை வைத்து ரிசர்வேஷன் பட்டியலில் இருந்த பெயரோடு சரிபார்த்ததில் மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்புர் மாவட்டத்தின் காசி காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த மோஹித் ராசா, நஸ்ரின் பேகம் என்பது தெரிய வந்திருக்கிறது.
அவர்களின் ஊர் 20 கி.மீ தொலைவில் இருக்கும் அலுவாபரி ரயில் நிலையம் அருகே இருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதனையடுத்து ரயில்வேயின் ஒரு குழு அந்த தம்பதியின் வீட்டை கண்டுபிடித்து ரயிலில் தவறவிட்ட குழந்தையின் பொம்மையை ஒப்படைத்திருக்கிறார்கள்.
பொம்மையை கொண்டு வந்து சேர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகிகள் மேற்கொண்ட மெனக்கெடலை எண்ணி மோஹித் ராசா அதிசயித்து போயிருக்கிறார்.
இது குறித்து பேசியிருக்கும் அவர், “வெறும் பொம்மைக்காக இவ்வளவு பெரிதாக முயற்சிப்பார்கள் என நினைக்கவேயில்லை. என் மகனுக்கு மிகவும் பிடித்தமான ட்ரக் பொம்மையாக இருந்தாலும் நானும் புகார் எதுவும் கொடுக்காமல் இருந்துவிட்டேன்.” என கூறியிருக்கிறார்.