பாகிஸ்தானின் ராணுவத்திடம் இருந்து இந்தியா வரவுள்ள அபிநந்தனை வரவேற்க வாகாவில் பிரம்மாண்ட வரவேற்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமில் உள்ளார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் லாகூர் அழைத்துவரப்பட உள்ளார். லாகூர் வந்த பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் வாகா எல்லைக்கு சாலை மார்க்கமாக வரவுள்ளார். இதுதொடர்பான இறுதி நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளனர். இதற்கான பணியில் இந்திய வெளியூறவுத்துறை அமைச்சகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர் வருகைக்கான ஏற்பாடுகள் வாகா எல்லையில் தற்போதே தொடங்கிவிட்டன. அபிநந்தனை வாகா எல்லையில் வரவேற்க பஞ்சாப் முதலமைச்சரான அமரீந்தர் சிங் அங்கு செல்லவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் லாகூர் வந்து சேர்ந்தபின்னர், இந்தியாவிற்கு எப்போது வருவார் என்ற தகவல்கள் வெளியாகும். அதேசமயம் வாகா எல்லைக்குள் அபிநந்தன் நுழையும்போது, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரை வரவேற்க பஞ்சாப் மக்கள் பெரும் திரளாக மலர்களோடு காத்திருக்கின்றனர்.
அபிநந்தன் இந்தியா வந்தவுடன் குடும்பத்தினரை சந்தித்த பின்னர், அதிகாரிகளுடான ராணுவ ஆலோசனைக்கு முதலில் அழைத்துச்செல்லப்படுவார். அதன்பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். அத்துடன் பாகிஸ்தானில் அவர் நடத்தப்பட்ட முழு விவரங்கள் கேட்கப்பட்டு, அது ராணுவக் குறிப்பில் பதிவு செய்யப்படும். அதன்படி, பின் வரும் காலங்களில் அது ராணுவ முறைகளாக பின்பற்றப்படும்.