அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிட் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மனதில்கொண்டு பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனப்பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ்.எம் வைத்யா, அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களும், அடுத்த ஒரு வருடத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், 2 வருடங்களில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், மூன்று வருடங்களில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் என படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்து இருக்கக்கூடியவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தொலைதூரம் பயணிக்க முடியும் எனவும், ஒட்டுமொத்த நாட்டில் கார்பன் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய அளவில் குறையும் எனவும் எஸ்.எம் வைத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சில மாதங்களுக்குமுன் டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நாடு முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் அரசால் நடத்தப்படக்கூடிய ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் டாடா பவர் நிறுவனத்துடன் கைகோர்த்து நாட்டின் சிறுசிறு நகரங்களை இணைக்கக்கூடிய வகையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களில் அமைக்கக்கூடிய பணிகளைத் தொடங்கியுள்ளது.