வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை அண்மையில் மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்காத பயனர்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது வாட்ஸ் அப் நிறுவனம். அதையடுத்து உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் மாதிரியான அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம் என சொல்லியிருந்தார்.
தொடர்ந்து வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் அதற்கு குட் பை சொல்லியிருந்தனர். அதையடுத்து கடந்த ஞாயிறு அன்று பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் தன்னிலை விளக்கம் கொடுத்தது வாட்ஸ் அப். இந்நிலையில், பிரைவஸி பாலிசியில் மேற்கொண்டுள்ள மாற்றங்களை கைவிடுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில் காத்கார்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளது மத்திய அரசு(இந்தியா).
அதில் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கைகள் கவலையளிக்கும் விதமாக இருப்பதாக தெரிவித்துள்ளது தகவல் தொழில்நுடப் அமைச்சகம். அதோடு பிரைவசி மற்றும் தரவுகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்குமாறும் வாட்ஸ் அப்பை மத்திய அரசு பணித்துள்ளது. அது தொடர்பாக 14 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்திய பயனர்களிடம் இருந்து வாட்ஸ் அப் பெற்று தரவுகளின் சரியான விவரங்களை தெரிவியுங்கள். இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள வாட்ஸ் அப் பிரைவசி பாலிசியின் வேறுபாட்டை விரியுங்கள். வாட்ஸ் அப் அதன் சக நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்கின்றனவா. பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் Third party-க்கு பகிரப்படுகிறதா என்பது மாதிரியான கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளன.