சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பூனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய மருந்து தர நிர்ணயக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருந்தது. இந்நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து, மூன்று கட்ட பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் நாடுமுழுவதும் வருகிற 16ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கிடையேயான ஆலோசனை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்துள்ள 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று அல்லது நாளை காலையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசி விநியோகம் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குளிர்பதன வசதிகள் கொண்ட போக்குவரத்து சாதனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.