ஒகி புயலால் கடலில் சிக்கித் தவித்த மீனவர்களில் இதுவரை 624 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகி புயல் மீட்பு குறித்த பாதுகாப்புப் படையினர் செய்திக் குறிப்பில், உயிருடன் மீட்கப்பட்டுள்ள மீனவர்களில் தமிழக மீனவர்கள் 233 பேரும், கேரளாவைச் சேர்ந்த 361 பேரும் லட்சத்தீவுப் பகுதியைச் சேர்ந்த 30 மீனவர்களும் அடங்குவர் எனக் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் ஆழ்கடலில் சிக்கியுள்ள மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, கேரளா மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் இந்திய கடகோரக் காவல் படையைச் சேர்ந்த 13 கப்பல்கள், 3 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 10 கப்பல்கள், 3 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பாதுகாப்பு படையினர் அல்லாத வணிகக் கப்பல்கள் உள்ளிட்டவை மூலம் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புப் படையினரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.