குழந்தை அழுத காரணத்திற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸில் இருந்து இந்தியர்கள் கீழே இறக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்திய தம்பதியர்கள் மீது இன தொடர்பான பாகுபாடு காட்டப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
லண்டன்- பெர்லின் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வெஸில் இந்திய தம்பதியினர் ஒருவர் தங்களது மூன்று வயதுக் குழுந்தையுடன் பயணிக்க ஏறியுள்ளனர். விமானம் கிளம்பும் நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்திய தம்பதியரும் தங்களின் குழந்தைக்கு சீட் பெல்டை அணிவித்துள்ளனர். ஆனால் குழந்தை என்னவென்று புரியாமல் அழுதுள்ளது. எனவே குழந்தையின் தாய் சீட் பெல்டை கழற்றி குழந்தையை தனது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது. எனவே அவர்களது இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து வேறொரு இந்தியர், குழந்தையை சமாதானம் செய்ய பிஸ்கட் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை விடாமல் அழ, அங்கிருந்து வந்த விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் ஒருவர் குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். ‘போய் உன் இருக்கையில் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன்” என மிரட்டியுள்ளார். தொடர்ந்து இந்தியர்களிடம் இனம் தொடர்பான பாகுபாடு காட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த ஆண் திட்டியதால் குழந்தை அழுகையை விடவில்லை.
இதனிடையே விமானத்தை கிளப்பாமல் விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் அங்கிருந்த காவலர்களை வரவழைத்து தம்பதியர்களை குழந்தையோடு கீழிறக்கியுள்ளார். மேலும் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்த இந்தியரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது இந்த புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். எந்தவிதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.