உக்ரைன் போர் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டில் இருந்த இந்தியத் தூதரகம் தற்காலிகமாக போலந்துக்கு இடம்பெயர்ந்துள்ளது.
உக்ரைனில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. முதலில் அந்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள நகரங்களை குறிவைத்து தாக்கி வந்த ரஷ்ய ராணுவம், தற்போது மேற்கு பகுதி மீது தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. அதேபோல, தலைநகர் கீவ்வுக்கு 25 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் தற்போது படிப்படியாக அந்நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. இதனால் கீவ் நகரம் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. விரைவில் கீவ் நகரம் ரஷ்ய ராணுவத்திடம் வீழ்ந்துவிடும் என மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்காப்பு நடவடிக்கையாக கீவ்வில் செயல்பட்டு வந்த இந்தியத் தூதரகம், அண்டை நாடான போலந்துக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளது. அங்கு நிலவி வரும் சூழலை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடந்த உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, உக்ரைன் இந்தியத் தூதரகம் போலந்துக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.