இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளதாக நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியர் அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையை விரட்ட உதவியதற்காகவும், பரிசோதனை முறையில் ஏழ்மைக்கு தீர்வுகளை கண்டதற்காகவும் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபிஜித் பேனர்ஜிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளதாக நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது பொருளாதாரம் விரைவில் மீட்சியடையும் என கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி இருந்ததாகவும் தற்போது அதுவும் இல்லை என்றும் அபிஜித் தெரிவித்துள்ளார்.