மாடுகளின் கழிவுகள் கொரோனா தொற்றை குணப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்றும் இது மேலும் பல நோய்கள் பரவ வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சிலர் வாரம் முறை மாட்டுத்தொழுவத்திற்கு சென்று மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரை உடல் முழுக்க பூசிக் கொண்டு, அது காயும் வரை பொறுமையாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.இறுதியில் பால் அல்லது வெண்ணெயால் தங்களது உடலை சுத்தம் செய்து கொள்கின்றனர். அவர்கள் மாடுகளை கட்டியணைத்து மரியாதையும் செய்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று குணமாகிறது என்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இதற்கு எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்றும் இது மேலும் பல நோய்களுக்கு வித்திடுவதாக அமைந்து விடும் என்றும் இந்திய மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்
இது குறித்து இந்திய மருத்துவ சங்கத் தலைவரும் மருத்துவரான டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் கூறும்போது, “ கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மாடுகளின் கழிவுகள் கொடுக்கிறது என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டது. இதனால் உடல்நலகோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமன்றி விலங்கிடம் இருந்து மனிதனுக்கு பிற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அங்கு மக்கள் குழுக்களாக கூடுவதால் கொரோனா தொற்று பரவும்” என்றார்.