‘ரெயின்கோட், ஹெல்மெட் தான் தற்காப்பு  உபகரணம்’ - கொரோனா மருத்துவர்களின் அவலநிலை

‘ரெயின்கோட், ஹெல்மெட் தான் தற்காப்பு  உபகரணம்’ - கொரோனா மருத்துவர்களின் அவலநிலை
‘ரெயின்கோட், ஹெல்மெட் தான் தற்காப்பு  உபகரணம்’ - கொரோனா மருத்துவர்களின் அவலநிலை
Published on
இந்திய மருத்துவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சரியான மருத்துவ தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல் ரெயின்கோட்  மற்றும் ஹெல்மெட் போன்றவற்றை வைத்துச் சமாளித்து வருவது கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் இதுவரை 1,251 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 32 பேரை  கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலை  எதிர்த்துப் போராடி வரும்  சில மருத்துவர்கள் முறையான தற்காப்பு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல்  ரெயின்கோட் மற்றும்  வாகனம் ஓட்டும் போது தலையில் அணியும்  தலைக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நாட்டில் நிலவிவரும்  தனிநபர் பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மொத்தமாகத் தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. 
ஆனால், கொரோனா நோய்க்கு   சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் பலர், சரியான முகக்கவசங்கள் மற்றும் சரியான மருத்துவ அங்கிகள் இல்லாமல் சிகிச்சை அளித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் ஆபத்தான நிலைக்கு மாறக்கூடும் என்று கவலைப்படுவதாக ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்குச் சிலர் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள  பெலகட்டா நோய்த் தொற்று மருத்துவமனையில் கொரோனா  நோய்க்குச் சிகிச்சை அளித்து வரும் ஜூனியர் மருத்துவர்கள் சிலர், கடந்த வாரம் நோயாளிகளைப் பரிசோதிப்பதற்கானச் சரியான மருத்துவ உபகரணத்தை வழங்காமல் வெறும் பிளாஸ்டிக் ரெயின்கோட்டுகளை மட்டுமே தங்களுக்கு வழங்கியதாக அங்கு பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள்  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் புகார் குறித்து, "நாங்கள் எங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க சொந்தக் காசை செலவு செய்ய முடியாது" என்று அந்த ஜூனியர்  மருத்துவர்களில் ஒருவர் கூறியுள்ளார். அவர் உயரதிகாரிகளிடமிருந்து சில விளைவுகள் வரலாம் என அஞ்சி அவரது பெயரைக் குறிப்பிட மறுத்துள்ளார். இந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஆசிஸ் மன்னாவிடம் கேட்டபோது இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக என்டி.டிவி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இதேபோல் ஹரியானாவிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிபுரியும் டாக்டர் சந்தீப் கார்க்,  தன்னிடம் இருசக்கர வாகனத்திற்காகப் பயன்படுத்தும்  ஹெல்மெட்டை மருத்துவ தற்காப்பு உபகரணமாக பயன்படுத்துமாறு  கூறினார்கள் என்று சாட்சியம் அளித்துள்ளார்.  N95 முகக்கவசம்  அவரிடம் இல்லை. எனவே  அதற்குப் பதிலாகத் தலைக்கவசத்தைப் பயன்படுத்த இவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.  "நான் ஒரு ஹெல்மெட் அணிந்தேன். ஏனென்றால் முகக்கவசம் இல்லை. இதைப் போட்டால் என் முகப்பகுதி மறைக்கப்பட்டுவிடும்" என்று டாக்டர் கார்க் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com