2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் என்பது நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை அரசியல் சாசன தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.
நாட்டு மக்களை ஆட்சி புரியம் அடிப்படையான அரசியல் முறைமைகளைக் கூறுவது அரசியலமைப்பு எனப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய - மாநில - யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அலுவலகங்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நிதி பற்றிய விதிகள் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் என ஒவ்வொரு செயல்பாடுகளையும், அங்குலம் அங்குலமாக மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ள ஒரு கட்டளையாகும்.
1946 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன சபை உருவாக்கப்பட்ட நிலையில் அதன் முதல் கூட்டம் அதே ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அக்குழுவின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய இந்தியாவின் பெரும் தலைவர்கள் பலரும் இந்த சபையில் இடம்பெற்றிருந்த நிலையில் மகாத்மா காந்தி இக்குழுவில் இடம்பெறவில்லை. இதன் பின்னர் அரசியலமைப்புக் குழுவின் நிரந்தரத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதே ஆண்டு டிசம்பர் 11 ஆன் தேதி நியமிக்கப்பட்டார்.
வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் நியமிக்கப்பட்டார். அம்பேத்கர் தலைமையிலான குழுவில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார், கோபால்சாமி ஐயங்கார், டாக்டர் முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மிட்டர், டி.பி. கைத்தான் போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்ட நிலையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதலில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல் வரைவு அரசமைப்புச் சட்டம் வெளியிடப்பட்டது. பொதுமக்களுக்கு 8 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளை ஏற்று பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டது. இதன்பின் இரண்டாவது தடவையாக அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதி அறிக்கை அரசியல் சாசன சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் உறுப்பினர்கள் இறுதி வரைவு அறிக்கையின் மீது நீண்ட விவாதம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி சபையில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கி இருக்கக்கூடிய உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என தெள்ளத் தெளிவான வரையறைகளும் இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது.
நமது அரசியல் சாசனத்தின் முகப்பு ஆங்கிலத்தில் ப்ரியாம்பல் என்று சொல்வார்கள். இந்த ஒரே பத்தியில் இந்தியா எத்தகைய நாடு என்பதை தெள்ளத் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. “பாரத தேசத்தை மதச்சார்பற்ற சமதர்ம குடியரசாக அமைப்பதற்கு, இந்திய மக்களாகிய நாங்கள் உறுதிப்பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார அரசியல் நீதி, எண்ண, எழுத எடுத்து செல்ல நம்பிக்கை வைக்க வழிபாடு செய்ய சுதந்திரம், தரத்திலும் தகுதியிலும் வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களுடைய தனிமனிதரின் கௌரவம் மற்றும் தேசிய ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் உறுதியளிக்க தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம்”. இந்தியா எத்தகைய நாடு என்பதை உலகிற்கு பறைசாற்றுகிறது இந்த முகவுரை.