காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி இஸ்ரேல் போராலும், உக்ரைன் மீது இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா நடத்திவரும் போராலும், இன்னும் சில நாடுகளில் எழும் எல்லைப் பிரச்னைகளாலும் மூன்றாம் உலகப்போர் உருவாக வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ர்ம்பகூட, ”இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குள் மூன்றாம் உலகப்போர் நடைபெற வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும், அதற்கு முன்பே பாபா வங்கா உள்ளிட்டவர்கள் கணித்த கணிப்புகளும், அது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன” என இந்திய ஜோதிடர் குஷால் குமார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வலைதளம் ஒன்றில் அவர், “2024 உலகெங்கிலும் நடைபெறும் போர்ப் பதற்ற சூழ்நிலைகளே இதைக் கணிக்ககூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் குறித்த செய்திகளும் இஸ்ரேல் - காஸா போரும் இதற்கு உதாரணமான கணிப்பைத் தருகின்றன. மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் -ரஷ்யா போரும் இதன்காரணமாக நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர், பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல்நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். அதேநேரத்தில் இன்னும் சில நாடுகள் அரசியல் எழுச்சிகள் எழலாம். அதைத் தடுக்க ராணுவம் கொண்டுவரப்படலாம்.
இதனால் உலகப்போர் நடைபெற வாய்ப்பிருக்கிறது” என்று சொல்லும் அவர், ஜூன் 18க்குப் பிறகு மூன்றாவது உலகப்போரைத் தூண்டுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அதற்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதியோ அல்லது ஜூன் 29ஆம் தேதி நிகழ வாய்ப்புள்ளதாகவும் என அவர் அந்த வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.