காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில், எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள், எல்லைப் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் ’பேட்’ (Border Action Team ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களை எடுத்து செல்வதற்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது. வெள்ளை கொடியுடன் வந்து உடல்களை எடுத்து செல்லுமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.