பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நாளை தாயகம் திரும்புகிறார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இரு நாடுகளிடையே அமைதியை பராமரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்தியாவின் மிக் விமானம் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தியது, அப்போது பதிலடி தரும் வகையில் மிக் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. தங்கள் பகுதியில் விழுந்த மிக் விமானத்தின் விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் படைகள் சிறைபிடித்தன.
இதைத் தொடர்ந்து அவரது வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அபிநந்தனை விடுவிக்குமாறு டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா வலியுறுத்தியது. மேலும், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் அபிநந்தனை விடுவிக்க வற்புறுத்தினார். இதுதவிர வெளிநாட்டு தலைவர்கள் மூலமும் அபிநந்தனை விடுவிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. இதன் பலனாக அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தானிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் சென்று தனி ஒருவனாக இந்திய வீரத்தை எடுத்துக்காட்டிய இந்த வீரரின் வருகைக்காக இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் கவலை கண்களில் மறைக்கொண்டிருந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்ற செய்தி இன்று வெளியானதுமே, நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நாளை அவர் வரும் நேரம், இந்தியா கொண்டாட்ட மனநிலை கொள்ளும் எனத் தெரிகிறது. அத்துடன் அவருக்கு ராணுவ மாரியாதையுடன் வீர வரவேற்பு அளிக்கப்படும் எனப்படுகிறது. அபிநந்தன் உறவினர்கள் கூறும்போது, "இரு நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும். மனிதநேயம் தழைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். இது பெருவாரிய மக்களின் கருத்தாகவும் உள்ளது.