ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து எல்லையில் இந்திய விமானப் படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப் படை எல்லையில் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்தியுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானையொட்டி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் விமானப் படை சார்பில் மிகப்பெரிய ஒத்திகை நடத்தப்பட்டது. அதில் அனைத்து விதமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபட்டன. பயிற்சியில் ஈடுபட்ட 137 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன.
அதுமட்டுமல்லாமல் தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையும், வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனையும் நடத்தப்பட்டது. ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். விமானப்படையின் பலத்தை உணர்த்தும் விதமாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாக பிரதமர் அறிவித்த நிலையில் மிகப்பெரிய அளவில் ஒத்திகை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.