89-வது இந்திய விமானப்படை தினம்: அப்படியென்ன சிறப்பு இந்த நாளுக்கு?

89-வது இந்திய விமானப்படை தினம்: அப்படியென்ன சிறப்பு இந்த நாளுக்கு?
89-வது இந்திய விமானப்படை தினம்: அப்படியென்ன சிறப்பு இந்த நாளுக்கு?
Published on
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்திய விமானப்படை உருவக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 89-வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
விமானப்படை தோன்றிய வரலாறு
பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932 அன்று இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை. இரண்டாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்கேற்றது.
இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறி வருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், ‘ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்’ என்ற பெயரை இந்திய விமானப் படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு ராயல் இந்திய விமானப்படையாக பெயர் மாற்றம் பெற்றது இந்திய விமானப்படை.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை' என்றே பெயர் பெற்றிருந்தது. 1950-ம் ஆண்டு, குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றப்பட்டது.
1950-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் 4 போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் காக்டஸ், ஆபரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் இந்திய விமானப்படை பங்கெடுத்திருக்கிறது. 1933ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவ சின்னம் 4 முறை மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது தேசியக் கொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்திய விமானப்படை உலகில் நான்காவது வலிமையான விமானப்படையாக உள்ளது. போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,400 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன. 1,70,000-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். ரஃபேல், மிராஜ் 2000, மிக் 21, மிக் 27, மிக் 29, ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன. விமானப்படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் 60 தளங்கள் உள்ளன. இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில், இந்திய விமானப் படைக்கு ஒரு தளம் உள்ளது. இந்திய விமானப்படையின் அருங்காட்சியகம் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் விமானப்படையின் வரலாற்றையும், சாதனைகளும் பிரதிபலிக்கும் காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் உலகின் மிகவும் உயரமான கோபுரங்களில் ஒன்றை லடாக்கின் மலைச்சிகரத்தின் மீது இந்திய விமானப்படை அமைத்துள்ளது. அதி நவீன விமானங்களை இறக்குவதற்கும் ஹெலிகாப்டர்களை கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்த்துவதற்கும் இந்த சிக்னல் கோபுரங்கள் பயன்படும். லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி , புகுச்சி, நயோமா போன்ற பகுதிகளில் அசல் எல்லைக் கோட்டை சில நிமிடங்களில் எட்டும் வகையில் இந்திய விமானங்களும், அபெச்சி போன்ற ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ரபேல், மிக் 29 போன்றவற்றையும் இங்கு நிறுத்த விமானப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியதாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது சுமார் 20 ஆயிரம் பேரை மீட்டு விமானப் படை சாதனை படைத்துள்ளது. மேலும், 3,82,400 கிலோ எடையுடைய மீட்பு மற்றும் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கியது.
பிரதமர் வாழ்த்து
இவ்வளவு பெருமையும் வலிமையையும் வாய்ந்த இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப்படை அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப்படையின் விமானங்கள் வானில் பறந்து விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்தின. காசியாபாத்தில் நடைபெற்ற விமானப்படை தின நிகழ்ச்சியில் இந்திய விமானப்படைக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தையொட்டி விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும். நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் அவர்களின் மனிதாபிமான உணர்வுகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு அவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
விமானப்படையில் 35 தாக்குதல் படைப்பிரிவுகள் உருவாகிறது
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி கூறுகையில், ‘’கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் எந்தவித பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்வதற்கு விமானப்படை முழு தயார் நிலையில் உள்ளது. லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவத்தினர் ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பு வசதிகள், இந்தியாவின் தயார் நிலையையும் தாக்குதல் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது.
பாகிஸ்தான், சீனா என இரு முனைகளில் இருந்தும் வரும் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் விமானப்படைக்கு உள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதும் நவீன ஆயுதங்களின் வருகையும் விமானப்படையின் தாக்குதல் திறனை பலமடங்கு அதிகரித்துள்ளது. படையில் உள்ள பழைய போர் விமானங்களுக்கு ஓய்வளித்துவிட்டு புதியவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிக்-21 போர் விமானங்களைக் கொண்ட 4 படைப் பிரிவுகளுக்கு அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ஓய்வளிக்கப்படவுள்ளது. அடுத்த தசாப்தத்தின் இறுதிக்குள் விமானப் படையில் சுமார் 35 தாக்குதல் படைப் பிரிவுகள் உருவாக்கப்படும். முப்படைகளையும் ஒருங்கிணைத்து புதிய படைப் பிரிவை உருவாக்குவதில் விமானப்படை உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’’ என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com