சிஎம்ஐஇ( CMIE) அமைப்பு நடத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜனவரியில் 6.57 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது மார்ச் 2021 க்குப் பிறகு மிகக் குறைவான சதவீதம் ஆகும்.
ஜனவரியில் நகர்ப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8.16 சதவீதமாக இருந்தபோதும், கிராமப்புறங்களில் இது மிகக் குறைவாக 5.84 சதவீதமாக இருந்தது. இதில் 35 மில்லியன் மக்கள் தீவிரமாக வேலை தேடுகிறார்கள், அதில் 23 சதவீதம் அல்லது 8 மில்லியன் பேர் பெண்கள் என்று இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான சிந்தனைக் குழு (CMIE) தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து, நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருவதால் நாட்டில் வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 டிசம்பரில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.91 சதவீதமாகவும், இதில் நகர்ப்புறங்களில் 9.30 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.28 சதவீதமாகவும் இருந்தது. நாட்டில் தெலங்கானாவில் ஜனவரி மாதம் மிகக் குறைந்த வேலையின்மை விகிதமாக 0.7 % உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (1.2 சதவீதம்), மேகாலயா (1.5 சதவீதம்) மற்றும் ஒடிசா (1.8 சதவீதம்) என உள்ளன. இருப்பினும், ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 23.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 18.9 சதவீதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 நிலவரப்படி இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 53 மில்லியனாக இருப்பதாக CMIE மதிப்பிட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆக இருந்தனர்.