"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மூவர்ணக்கொடி பறக்கும்" - பாஜக அமைச்சர்
விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்திய மூவர்ணக்கொடி பறக்கும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிதி காஷ்மீர் தொடர்பாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு இந்தியக் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர், ஷிகர் தவான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, அப்ரிதியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியத் தேசிய மூவர்ணக்கொடி விரைவில் பட்டொளி வீசி பறக்கும். இந்தியாவில் நடப்பது மோடியின் அரசாங்கம் என்பதை அப்ரிதி போன்ற பாகிஸ்தானியர்கள் உணர வேண்டும். ஏற்கெனவே சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த எண்ண வேண்டும்" என்றார்.
மேலும் தொடர்ந்த சுக்லா " அப்ரிதியிடம் இருந்து இதுபோன்ற பேச்சுகளை எதிர்பார்க்கவில்லை. அவர் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான பேச்சுகளைக் கைவிட வேண்டும். என்ன செய்வது அவர் எப்போதும் பாவப்பட்ட கிரிக்கெட் வீரர்தான். அவர் பவுலிங் செய்து அதனை சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட் ஆகியோர் விளாசியதை இன்னும் மறக்கவில்லை போலும். இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத்தில் 1965 இல் தேசியாகக் கொடியை ஏற்றியது" என்றார் அவர்.