உலக அளவில் இணையத்தை அதிகம் முடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் இணையம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இணையதளங்கள் மூலம் போராட்டங்கள் அதிக அளவில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் வலுப்பெறும் நேரத்தில் இணையதள சேவையை மத்திய அரசு முடக்கிவிடும். அதன்படி உலக அளவில் இணையத்தை அதிகம் முடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 2018ல் 112 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ராஜஸ்தானின் 56 முறையும் இணையம் முடக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், ஹரியானா, பீகார், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தெலங்கானாவில் 5 வருடத்தில் இரண்டு முறை மட்டுமே இணையம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2012 முதல் 2018 அக்டோபர் வரை 259 நிகழ்வுகளை குறிப்பிட்டு இணையம் முடக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது மற்ற நாடுகளில் மிகவும் குறைவான அளவிலேயே இணையம் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் இணைய முடக்கத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உள்ளூர் பிரச்னைகள், மதக்கலவரம், போராட்டங்கள் ஆகியற்றை காரணமாக குறிப்பிட்டே இணையம் முடக்கப்படுவதாகவும், சமீப காலத்தில் பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்து மக்கள் போராட்டம் நடத்தியதும் இணைய முடக்கத்தின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இணையதள முடக்கத்துக்கு குறிப்பிட்ட எந்த சட்டமும் இல்லாத நிலையில் 144 தடையை குறிப்பிட்டே இணையதளம் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கல்வி, மருத்துவம், அறிவியல், வேலைவாய்ப்பு, இணையதள அடிப்படை தேவைகள் என இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் இணைய முடக்கத்துக்கு மாற்று வழி காண வேண்டும், இணையதளத்தின் குறிப்பிட்ட பிரச்னைகளை கையாளுவது எப்படி என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும் என்பதே இணையதளவாசிகளின் வேண்டுகோளாக உள்ளது.