டிராக்டர் பேரணியின் போது இறந்த விவசாயியை டெல்லி காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது ட்வீட் மற்றும் ஒளிபரப்பிய குறிப்பில் தெரிவித்தார். இதறகாக அவர்மீது ஆஃப் ஏர் நடவடிக்கை மற்றும் சம்பளக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா டுடே தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளரும், ஆலோசனை ஆசிரியருமான ராஜ்தீப் சர்தேசாய், ஜனவரி 26ஆம் தேதி நடந்த டிராக்டர் பேரணியில் டெல்லி காவல்துறையினர் ஒரு விவசாயியை சுட்டுக் கொன்றதாக அவரது தொலைக்காட்சி செய்திக்குறிப்பு மற்றும் ட்வீட்டரில் தகவல் வெளியிட்டதால் அவரை இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். மேலும் ஒரு மாத சம்பளத்தையும் தொகுப்பாளரிடமிருந்து பிடித்தம் செய்துள்ளது அந்த நிறுவனம்.
ஜனவரி 26 அன்று, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். டிராக்டர் அணிவகுப்பின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன, இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் குறைந்தது 37 விவசாய தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
ஜனவரி 26இல் சர்தேசாய் வெளியிட்ட ட்வீட்டில், “45 வயதான நவ்னீத் என்ற நபர், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள்: ‘தியாகம்’ வீணாகாது” என்று தெரிவித்தார். பின்னர், டெல்லி காவல்துறை ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் அந்த விவசாயியின் டிராக்டர் கட்டுப்பாட்டை மீறி கவிழ்வதைக் காணலாம்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு, சர்தேசாய் தனது தகவலை திரும்பப் பெற்று, “இறந்த நவ்னீத் சிங், டிராக்டரில் இருந்தபோது டெல்லி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வேளாண்சட்ட எதிர்ப்பாளர்கள் கூறினார்கள், ஆனால் டிராக்டர் கவிழ்ந்ததை இந்த வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. வேளாண் எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுகள் நிற்கவில்லை. பிரேத பரிசோதனை காத்திருக்கிறது” என தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக தலைவர்கள் சர்தேசாய்க்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் அல்லது "போலி செய்திகளை" பரப்பியதற்காக அவரை நீக்க வேண்டும் என்று கோரினர்.