இந்தியாவில் இருந்து 12 ஆண்டுகளில் கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ள சூழலில், கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 141 பேர் யாழ். போதை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றதாக தகவலும் வெளிவந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் பின்பு விடுதலைச் சிந்தனையே ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அந்த எண்ணத்தை மழுங்கடிக்கும் விதத்திலும் இந்த போதைப் பொருள்கள் நாட்டிற்குள் உலாவ விடப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டாக போர் காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் புழக்கம் என்ற விசயம் அறியப்படாத ஒன்றாக இருந்து வந்துள்ளது.
இதேநேரம் 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை இலங்கை கற்படைகளால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் அளவு தலை சுற்றும் நிலையில், அகப்படாமல் எடுத்துச் செல்லப்பட்டவை எவ்வளவு இருக்கும் என்ற இமாலய கேள்வியும் எழுகிறது.
ஏனெனில் கடந்த 12 ஆண்டுகளில் கஞ்சா மட்டும் 27 ஆயிரத்து 357 கிலோ பிடிபட்டள்ளது. அதே நேரம் 4 ஆயிரத்து 152 கிலோ ஹெராயினும், ஆயிரத்து 81 கிலோ ஐஸ் போதைப் பொருளும் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட போது பிடிபட்டது என கடற்படையினர் உறுதி செய்கின்றனர்.
இதற்கெல்லாம் மேலாக இலங்கையிலும் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் 11 ஆயிரத்து 26 கிலோ பிடிப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போரின் பின்பு 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 43 ஆயிரத்து 616 கிலோ போதைப் பொருள் இலங்கையில் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மிக அதிகமாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது என நம்பப்படும் நிலையில், இந்திய கரையோர காவல் படையினர் மற்றும் போலீசார் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி இந்தியாவில் ஏன் எழவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அதேநேரம் இலங்கை கடற்படையினரை தாண்டி எவ்வாறு உள்ளே எடுத்து வரப்படுகிறது என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.
இந்தியாவில் கிலோ கஞ்சா ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வி;லைபோகும், ஆனால், இலங்கை நாணயத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. தற்போது 3 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது. இந்த பின்புலத்தில் எஞ்சிய பணம் கடத்தல்காரர்களின் வருமானம் என்கின்றனர்.
இதேநேரம் இலங்கைக்கு எடுத்து வரப்படும் கஞ்சா முழுமையாக இலங்கை மக்களின் பயன்பாட்டிற்கு அன்றி அவை ஒன்று சேர்க்கப்பட்டு பிற நாடுகளுக்கும் கடத்தப்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவை வெறுமனே இலங்கை - இந்திய கடத்தலைத் தாண்டி சர்வதேச கடத்தலாகவே இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.