இந்தியா தனது அவசர கால தேவைக்காக சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெயை பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
மிகவும் இக்கட்டான கால கட்டங்களில் பயன்படுத்துவதற்காக உலக நாடுகள் கச்சா எண்ணெயை குறிப்பிட்ட அளவு கையிருப்பு வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இந்தியாவும் 3 கோடியே 80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை 3 இடங்களில் பிரமாண்ட நிலவறைகளில் சேமித்து வைத்துள்ளது. தற்போது கடுமையாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகளை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டிருந்தன. எனினும் இதற்கு ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் மறுத்துவிட்டன.
இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் கையிருப்பில் குறிப்பிட்ட அளவை பயன்பாட்டு்க்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து தன்னிடம் கையிருப்பில் உள்ள 3 கோடியே 80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயில் 50 லட்சம் பீப்பாய்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒன்றரை மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கச்சா எண்ணெய் விலை
இன்னும் 7 முதல் 10 நாட்களுக்குள் இந்நடவடிக்கை தொடங்கும் என மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் மேற்கத்திய நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து விலையில் கடந்த ஒரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் கணிசமாக குறைந்து 78 டாலராக உள்ளது. இதோடு கையிருப்பு கச்சா எண்ணெயும் சேரும் பட்சத்தில் அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது